Category: முஸ்லிம்

Muslim-652

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

652. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.

இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 4


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْتَرِئْ بِأُمِّ الْقُرْآنِ»


Muslim-651

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

(தொழுகையில்) ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதுவது கட்டாயமாகும். ஒருவருக்கு அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை முறைப்படி ஓதத் தெரியாமலும் அதைக் கற்றுக்கொள்ள முடியாமலும் போனால் அவருக்குத் தெரிந்த இதர இறைவசனங்களை அவர் ஓதிக்கொள்ளலாம்.

651. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.

இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 4


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ»


Muslim-650

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

650. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் தாலிப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தாவுக்காகக் குனியும்போது தக்பீர் கூறினார்கள். (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும்போதும் தக்பீர் கூறினார்கள். நாங்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் இம்ரான் (ரலி) அவர்கள் (மகிழ்ச்சியுடன்) எனது கையைப் பிடித்து நமக்கு இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையைப் போன்றே தொழுவித்தார் அல்லது இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவுபடுத்திவிட்டார் என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 4


صَلَّيْتُ أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ، خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، فَكَانَ «إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ»، فَلَمَّا انْصَرَفْنَا مِنَ الصَّلَاةِ، قَالَ: أَخَذَ عِمْرَانُ بِيَدِي. ثُمَّ قَالَ: «لَقَدْ صَلَّى بِنَا هَذَا صَلَاةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» – أَوْ قَالَ: قَدْ ذَكَّرَنِي هَذَا صَلَاةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-649

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

649. அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையில்) ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறிவந்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துவந்ததாகவும் அறிவிப்பார்கள்.

Book : 4


«أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ»، وَيُحَدِّثُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ»


Muslim-648

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

648. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொழுகையில் ஒவ்வொரு முறை நிமிரும்போதும் குனியும்போதும் தக்பீர் கூறிக்கொண்டிருந்தார்கள். (தொழுகை முடிந்ததும் அவர்களிடம்) நாங்கள், அபூஹுரைரா! இது என்ன தக்பீர்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை இவ்வாறுதான் அமைந்திருந்தது என்று பதிலளித்தார்கள்

Book : 4


أَنَّ أَبَا هُرَيْرَةَ، «كَانَ يُكَبِّرُ فِي الصَّلَاةِ كُلَّمَا رَفَعَ وَوَضَعَ»، فَقُلْنَا يَا أَبَا هُرَيْرَةَ مَا هَذَا التَّكْبِيرُ؟ قَالَ: «إِنَّهَا لَصَلَاةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Muslim-647

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

647. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மர்வான் பின் ஹகம் என்பார், அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்த காலகட்டத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொழுவிக்கத் துவங்கும்போது தக்பீர் (தஹ்ரீம்) கூறுவார்கள் என்று தொடங்கி முந்தைய ஹதீஸைப் போன்றே (645) குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் இந்த அறிவிப்பில், தொழுது முடித்துவிட்டு சலாம் கொடுத்ததும் பள்ளிவாசலில் இருப்பவர்களை முன்னோக்கி அமர்ந்துகொண்டு என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது.

Book : 4


أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ حِينَ يَسْتَخْلِفُهُ مَرْوَانُ عَلَى الْمَدِينَةِ إِذَا قَامَ لِلصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ وَفِي حَدِيثِهِ فَإِذَا قَضَاهَا وَسَلَّمَ أَقْبَلَ عَلَى أَهْلِ الْمَسْجِدِ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-646

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

646. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றவுடன் தக்பீர் கூறுவார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.

ஆனால், உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டது அதில் இடம் பெறவில்லை.

Book : 4


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ بِمِثْلِ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ وَلَمْ يَذْكُرْ قَوْلَ أَبِي هُرَيْرَةَ إِنِّي أَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-645

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

645. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றவுடன் (ஆரம்பத்தில்) தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉச் செய்யும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு ருகூஉவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ரப்பனா வ லக்கல் ஹம்து (எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். பிறகு சஜ்தாவுக்காகச் சரியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தாவுக்குச் செல்லும்போதும், பின்னர் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தொழுது முடிக்கும்வரை இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமர்ந்துவிட்டு எழும்போதும் தக்பீர் கூறுவார்கள் என்று கூறினார்கள்.

பிறகு உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என்று அபூஹுரைரா (ரலி)

«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ» ثُمَّ يَقُولُ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرُّكُوعِ» ثُمَّ يَقُولُ: وَهُوَ قَائِمٌ «رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي سَاجِدًا، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ فِي الصَّلَاةِ كُلِّهَا حَتَّى يَقْضِيَهَا وَيُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الْمَثْنَى بَعْدَ الْجُلُوسِ» ثُمَّ يَقُولُ: أَبُو هُرَيْرَةَ «إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Muslim-644

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

தொழுகையில் ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூற வேண்டும். ருகூஉவிலிருந்து நிமிரும் போது மட்டும் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூற வேண்டும்.

644. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபித்தோழர்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துவந்தார்கள். ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும் போதும் அன்னார் தக்பீர் கூறுவார்கள். தொழுது முடிந்ததும் அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என்று கூறுவார்கள்.

Book : 4


أَنَّ أَبَا هُرَيْرَةَ، «كَانَ يُصَلِّي لَهُمْ فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ، وَرَفَعَ» فَلَمَّا انْصَرَفَ قَالَ: «وَاللهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Muslim-643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

643. மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், நபி (ஸல்) அவர்கள் தம்மிரு காதுகளின் கீழ் முனைகளுக்கு நேராக இரு கைகளையும் உயர்த்தியதை நான் கண்டேன் என (மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

Book : 4


أَنَّهُ رَأَى نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: حَتَّى يُحَاذِيَ بِهِمَا فُرُوعَ أُذُنَيْهِ


Next Page » « Previous Page