Author: Farook

Muslim-3185

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

வசதியுள்ளவர் கடனை இழுத்தடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; கடனை மாற்றிவிடுவது செல்லும்; செல்வரிடம் கடன் மாற்றிவிடப்பட்டால் அதை ஏற்பது விரும்பத்தக்கதாகும்.

3185. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வசதியுள்ளவர் கடனை இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் வசதியுள்ள (மற்றொரு)வர்மீது மாற்றிவிடப்பட்டால், அவர் அதை ஏற்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 22


«مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ، وَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيءٍ فَلْيَتْبَعْ»

– حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَا جَمِيعًا: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ


Muslim-3184

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3184. அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், “நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்” என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்” என்றார். அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 22


أَنَّ أَبَا قَتَادَةَ، طَلَبَ غَرِيمًا لَهُ، فَتَوَارَى عَنْهُ ثُمَّ وَجَدَهُ، فَقَالَ: إِنِّي مُعْسِرٌ، فَقَالَ: آللَّهِ؟ قَالَ: آللَّهِ؟ قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللهُ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، فَلْيُنَفِّسْ عَنْ مُعْسِرٍ، أَوْ يَضَعْ عَنْهُ»

– وحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ، بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ


Muslim-3183

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் சென்ற)தம் ஊழியரிடம், “(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீர் சென்றால் (அவரைக் கண்டுகொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து)விடு. அல்லாஹ்வும் நம்மை(க் கண்டுகொள்ளாமல்) மன்னித்துவிடக்கூடும்” என்று சொல்லி வந்தார். அவர் (இறந்த பின்) அல்லாஹ்வைச் சந்தித்தபோது (அவருடைய பிழைகளைப் பொறுத்து) அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 22


كَانَ رَجُلٌ يُدَايِنُ النَّاسَ، فَكَانَ يَقُولُ لِفَتَاهُ: إِذَا أَتَيْتَ مُعْسِرًا فَتَجَاوَزْ عَنْهُ، لَعَلَّ اللهَ يَتَجَاوَزُ عَنَّا، فَلَقِيَ اللهَ فَتَجَاوَزَ عَنْهُ

– حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللهِ بْنَ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ بِمِثْلِهِ


Muslim-3182

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதர் (இறந்த பின்) விசாரணை செய்யப்பட்டார். அவரிடம் (அவரது வினைச்சீட்டில்) எந்த நற்செயலும் காணப்படவில்லை. எனினும், அவர் மக்களுடன் கலந்துறவாடுபவராய் இருந்தார். அவர் வசதியுடையவராக இருந்தார். தம் பணியாட்களிடம், சிரமப்படுவோரின் கடனைத் தள்ளுபடி செய்துவிடுமாறு கூறிவந்தார். அல்லாஹ், “இ(வ்வாறு தள்ளுபடி செய்வ)தற்கு அவரை விட நாமே மிகவும் தகுதியுடையோர். (எனவே,)அவருடைய தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான்.-இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 22


«حُوسِبَ رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ، فَلَمْ يُوجَدْ لَهُ مِنَ الْخَيْرِ شَيْءٌ، إِلَّا أَنَّهُ كَانَ يُخَالِطُ النَّاسَ، وَكَانَ مُوسِرًا، فَكَانَ يَأْمُرُ غِلْمَانَهُ أَنْ يَتَجَاوَزُوا عَنِ الْمُعْسِرِ»، قَالَ: ” قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: نَحْنُ أَحَقُّ بِذَلِكَ مِنْهُ، تَجَاوَزُوا عَنْهُ


Muslim-3181

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3181. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் (இறந்த பின்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அல்லாஹ், “உலகத்தில் நீ என்ன நற்செயல் புரிந்தாய்?” என்று கேட்டான். (அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.) அதற்கு அந்த அடியார், “இறைவா! உன் செல்வத்தை எனக்கு நீ வழங்கினாய். அதை வைத்து நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதே எனது இயல்பாக இருந்தது. வசதியுடையவரிடம் மென்மையாக நடந்து கொள்வேன்: சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பேன்” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ், “இ(வ்வாறு பெருந்தன்மையுடன் நடப்ப)தற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். (எனவே,) என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான்.

(ஹுதைஃபா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட) உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்களும், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து நாங்கள்

أُتِيَ اللهُ بِعَبْدٍ مِنْ عِبَادِهِ آتَاهُ اللهُ مَالًا، فَقَالَ لَهُ: مَاذَا عَمِلْتَ فِي الدُّنْيَا؟ قَالَ: وَلَا يَكْتُمُونَ اللهَ حَدِيثًا، قَالَ: يَا رَبِّ آتَيْتَنِي مَالَكَ، فَكُنْتُ أُبَايِعُ النَّاسَ، وَكَانَ مِنْ خُلُقِي الْجَوَازُ، فَكُنْتُ أَتَيَسَّرُ عَلَى الْمُوسِرِ، وَأُنْظِرُ الْمُعْسِرَ، فَقَالَ اللهُ: أَنَا أَحَقُّ بِذَا مِنْكَ، تَجَاوَزُوا عَنْ عَبْدِي “،

فَقَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ الْجُهَنِيُّ، وَأَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ، هَكَذَا سَمِعْنَاهُ مِنْ فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-3180

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3180. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றார். அப்போது அவரிடம், “நீ என்ன நற்செயல் புரிந்துள்ளாய்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிப்பேன். காசு விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வேன்” என்று கூறினார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன.

இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அப்போது அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நானும் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

Book : 22


أَنَّ رَجُلًا مَاتَ، فَدَخَلَ الْجَنَّةَ، فَقِيلَ لَهُ: مَا كُنْتَ تَعْمَلُ؟ – قَالَ: فَإِمَّا ذَكَرَ وَإِمَّا ذُكِّرَ – فَقَالَ: إِنِّي كُنْتُ أُبَايِعُ النَّاسَ، فَكُنْتُ أُنْظِرُ الْمُعْسِرَ، وَأَتَجَوَّزُ فِي السِّكَّةِ – أَوْ فِي النَّقْدِ – فَغُفِرَ لَهُ “، فَقَالَ أَبُو مَسْعُودٍ: وَأَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-3179

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3179. ரிப்ஈ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபித்தோழர்களான) ஹுதைஃபா (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் ஓரிடத்தில் சந்தித்துக்கொண்டனர். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “(முந்தைய காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர் (இறந்த பின்) தம் இறைவனைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இறைவன், “நீ (ஏதேனும்) நற்செயல் புரிந்திருக்கிறாயா?” என்று கேட்டான். அவர் “எந்த நல்லறமும் செய்ய வில்லை. எனினும், நான் பொருளாதார வசதியுடைய ஒரு மனிதனாக இருந்தேன். எனவே, (மக்களுக்கு நான் கொடுத்துவந்த) பணத்தை (திருப்பித் தருமாறு) மக்களிடம் கோருவேன். அப்போது (என்னிடமிருந்து கடன் வாங்கியவர் கொடுக்கும், அவரால்) இயன்ற தொகையைப் பெற்றுக்கொள்வேன்; இயலாத தொகையைத் தள்ளுபடி செய்துவிடுவேன்” என்று கூறினார்.

உடனே இறைவன், “என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான்”என்றார்கள். அதற்கு அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் “இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில்

اجْتَمَعَ حُذَيْفَةُ، وَأَبُو مَسْعُودٍ، فَقَالَ حُذَيْفَةُ: ” رَجُلٌ لَقِيَ رَبَّهُ، فَقَالَ: مَا عَمِلْتَ؟ قَالَ: مَا عَمِلْتُ مِنَ الْخَيْرِ إِلَّا أَنِّي كُنْتُ رَجُلًا ذَا مَالٍ، فَكُنْتُ أُطَالِبُ بِهِ النَّاسَ فَكُنْتُ أَقْبَلُ الْمَيْسُورَ، وَأَتَجَاوَزُ عَنِ الْمَعْسُورِ، فَقَالَ: تَجَاوَزُوا عَنْ عَبْدِي “، قَالَ أَبُو مَسْعُودٍ: هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ


Muslim-3178

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

கடனை அடைக்கச் சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு.

3178. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று, அவரிடம், “நீர் (உமது வாழ்நாளில்) ஏதேனும் நற்செயல் புரிந்திருக்கிறீரா?” என்று கேட்டார்கள்.அதற்கு அந்த மனிதர் “இல்லை” என்றார். வானவர்கள் “நன்கு நினைவு படுத்திப்பார்” என்று கூறினர். அவர் (யோசித்துவிட்டு) “நான் மக்களுக்குக் கடன் கொடுத்து வந்தேன். அப்போது (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிக்கும்படியும், வசதியுடையோருக்கு (அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் ஏற்பட்டால்) கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் என் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு வந்தேன்” என்று கூறினார். அல்லாஹ், “அந்த மனிதரின் குற்றங்குறைகளை கண்டு கொள்ளாமல் (மன்னித்து)விடுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான்.

இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

تَلَقَّتِ الْمَلَائِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ، فَقَالُوا: أَعَمِلْتَ مِنَ الْخَيْرِ شَيْئًا؟ قَالَ: لَا، قَالُوا: تَذَكَّرْ، قَالَ: كُنْتُ أُدَايِنُ النَّاسَ فَآمُرُ فِتْيَانِي أَنْ يُنْظِرُوا الْمُعْسِرَ، وَيَتَجَوَّزُوا عَنِ الْمُوسِرِ، قَالَ: قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: تَجَوَّزُوا عَنْهُ