Author: Farook

Abu-Dawood-18

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

தூய்மையின்றி, உயர்ந்தோன் அல்லாஹ்வை துதிப்பவர் குறித்து (வந்துள்ளவை).

18. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எல்லா நேரங்களிலும் (குளிப்பு கடமையாக இருக்கும் சமயத்தில் கூட) மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வை துதிப்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ عَلَى كُلِّ أَحْيَانِهِ»


Abu-Dawood-17

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17. முஹாஜிர் பின் குன்ஃபுத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது வந்து அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்து முடிக்கும் வரை அவருக்கு பதில் ஸலாம் கூறவில்லை.

பிறகு, “தூய்மையில்லாத நிலையில் மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதை நான் வெறுக்கிறேன்” என்று அவரிடம் காரணம் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஹுளைன் பின் முன்திர் (ரஹ்)


أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأَ، ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِ فَقَالَ ” إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا عَلَى طُهْرٍ أَوْ قَالَ: عَلَى طَهَارَةٍ


Abu-Dawood-15

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 7

கழிவறையில் பேசுவது அருவருக்கத்தக்கது.

15. இரண்டு மனிதர்கள் மலம் கழிக்க (ஒன்றாகச்) சென்று, ஒருவர் மற்றவருக்கு முன் மறைவான உறுப்புகளைத் திறந்தும், பேசிக் கொண்டும் மலம் கழிக்க வேண்டாம். இதனால் மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கோபப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(யஹ்யா பின் அபீகஸீர் அவர்களிடமிருந்து பலர் இந்த நபிமொழியை அறிவிக்கிறார்கள். இவர்களில்) இக்ரிமா பின் அம்மார் மட்டும் தான் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். (மற்றவர்கள் மவ்கூஃபாக-நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்)


«لَا يَخْرُجُ الرَّجُلَانِ يَضْرِبَانِ الْغَائِطَ كَاشِفَيْنِ عَنْ عَوْرَتِهِمَا يَتَحَدَّثَانِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَمْقُتُ عَلَى ذَلِكَ»


Abu-Dawood-14

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 6

மலம், ஜலம் கழிக்கும் போது எப்போது ஆடையை விலக்குவது?

14. நபி (ஸல்) அவர்கள் தன் இயற்கைக் கடனை நிறைவேற்ற விரும்பினால் (தம் மறைவான உறுப்புகளை யாரும் பார்த்துவிடாதபடி) தரைக்கு மிக நெருக்கமான பின் தமது ஆடையை உயர்த்துவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அவர்கள், அஃமஷ் —> அனஸ் பின் மாலிக் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். (அஃமஷ் அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால்) இது பலவீனமானதாகும்.

(அபூதாவூத் இமாம் அவர்களின் எழுத்தாளரான) அபூஈஸா அர்ரம்லீ (இஸ்ஹாக் பின் மூஸா பின் ஸஃத்) கூறுகிறார்:

அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரை எங்களுக்கு, அஹ்மத் பின் வலீத் அவர்கள், அம்ர் பின் அவ்ன் —> அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் —> அஃமஷ் —> அனஸ் பின் மாலிக் (ரலி) என்று அறிவித்தார்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ حَاجَةً لَا يَرْفَعُ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الْأَرْضِ»


Abu-Dawood-13

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13. நபி (ஸல்) அவர்கள், நாங்கள் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர் கழிப்பதற்கு தடை விதித்திருந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன், அவர்கள் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர் கழித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«نَهَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِبَوْلٍ، فَرَأَيْتُهُ قَبْلَ أَنْ يُقْبَضَ بِعَامٍ يَسْتَقْبِلُهَا»


Abu-Dawood-12

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 5

மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க அனுமதி.

12. நான் (என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களின்) வீட்டின் மாடியில் ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கழிவறையில்) இரண்டு செங்கற்கள் மீது (கால்வைத்து) பைத்துல் மக்திஸை முன்னோக்கி அமர்ந்து மலம் கழித்துக் கொண்டிருந்ததை (தற்செயலாக) நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


لَقَدْ ارْتَقَيْتُ عَلَى ظَهْرِ الْبَيْتِ، «فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ لِحَاجَتِهِ»


Abu-Dawood-11

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11. மர்வான் அல்அஸ்ஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் ஒட்டகத்தைக் கிப்லா திசையில் அமரவைத்து (பின்னர் அதை மறைப்பாக ஆக்கி) கிப்லாவை நோக்கியவாறு சிறுநீர் கழித்ததை நான் பார்த்தேன்.

அப்போது நான் அவர்களிடம், “அபூ அப்துர் ரஹ்மானே! இது தடுக்கப்படவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம், (எனினும்) அப்படிச் செய்வது திறந்த வெட்டவெளியில்தான் தடுக்கப்பட்டது. கிப்லாவுக்கும் உனக்கும் இடையில் (சுவர், கட்டடம், வாகனம் போன்ற) உன்னை மறைக்கும் ஏதேனும் பொருள் இருந்தால் (அது) தவறல்ல என்று பதில் அளித்தார்கள்.


رَأَيْتُ ابْنَ عُمَرَ أَنَاخَ رَاحِلَتَهُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ، ثُمَّ جَلَسَ يَبُولُ إِلَيْهَا، فَقُلْتُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، أَلَيْسَ قَدْ نُهِيَ عَنْ هَذَا؟  قَالَ: بَلَى إِنَّمَا «نُهِيَ عَنْ ذَلِكَ فِي الْفَضَاءِ، فَإِذَا كَانَ بَيْنَكَ وَبَيْنَ الْقِبْلَةِ شَيْءٌ يَسْتُرُكَ فَلَا بَأْسَ»


Abu-Dawood-10

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10. நாங்கள் சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது (பைத்துல் முகத்தஸ், கஃபா என்ற) இரு கிப்லாக்களை முன்னோக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: மஃகில் பின் அபூமஃகில் அல்அஸதீ (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும்) அபூஸைத் என்பவர் பனூ ஸஃலபா எனும் குலத்தாரால் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டவர் ஆவார்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَتَيْنِ بِبَوْلٍ أَوْ غَائِطٍ»


Abu-Dawood-9

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9. மலம் சிறுநீர் கழிக்க நீங்கள் சென்றால், கிப்லாவை முன்னோக்க வேண்டாம்; கிழக்கு அல்லது மேற்கு திசையை முன்னோக்கி அமருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்கு வந்தபோது அங்கு கழிவறைகள் கிப்லாவின் திசையில் கட்டப்பட்டு இருப்பதைக் கண்டோம். (அதனால் மலம் கழிக்கும் போது) கிப்லா திசையிலிருந்து (முடிந்த அளவு) திரும்பிக்கொள்வோம்; இறைவனிடத்தில் மன்னிப்புத் தேடிக்கொள்வோம்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி)


«إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلَا بَوْلٍ، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا» فَقَدِمْنَا الشَّامَ، فَوَجَدْنَا مَرَاحِيضَ قَدْ بُنِيَتْ قِبَلَ الْقِبْلَةِ، فَكُنَّا نَنْحَرِفُ عَنْهَا وَنَسْتَغْفِرُ اللَّهَ


Abu-Dawood-8

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8. உங்களுக்கு (மார்க்க நெறிகளை) கற்றுத் தருகின்ற தந்தையின் தரத்தில் உள்ளவன்தான் நான்! எனவே உங்களில் ஒருவர் மலம் (ஜலம்) கழிக்க சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ அமர வேண்டாம்; தன் வலது கரத்தினால் தூய்மை செய்ய வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் அவர்கள் எங்களுக்கு (துடைத்து சுத்தம் செய்யும் போது குறைந்தது) மூன்று கற்களை பயன்படுத்துமாறு கட்டளையிட்டார்கள்.

மேலும் கெட்டிச் சாணம், எலும்பு ஆகியவற்றைக் கொண்டு தூய்மை செய்யவேண்டாமென தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّمَا أَنَا لَكُمْ بِمَنْزِلَةِ الْوَالِدِ، أُعَلِّمُكُمْ فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا وَلَا يَسْتَطِبْ بِيَمِينِهِ، وَكَانَ يَأْمُرُ بِثَلَاثَةِ أَحْجَارٍ، وَيَنْهَى عَنِ الرَّوْثِ وَالرِّمَّةِ»


Next Page » « Previous Page