தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5687

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 7

கருஞ்சீரகம்.

 காலித் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

எங்களுடன் ஃகாலிப் பின் அப்ஜர் (ரலி) அவர்கள் இருக்க, நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப் (ரலி) நோய் வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப் (ரலி) அவர்களை இப்னு அபூஅத்தீக் (ரஹ்) அவர்கள் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.

அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள்.

ஏனெனில், ஆயிஷா (ரலி) என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; “சாமை”த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்கள். நான், “சாம்” என்றால் என்ன?’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “மரணம்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 76

(புகாரி: 5687)

بَابُ الحَبَّةِ السَّوْدَاءِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ، قَالَ

خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ، فَقَدِمْنَا المَدِينَةَ وَهُوَ مَرِيضٌ، فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ، فَقَالَ لَنَا: عَلَيْكُمْ بِهَذِهِ الحُبَيْبَةِ السَّوْدَاءِ، فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا، ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ، فِي هَذَا الجَانِبِ وَفِي هَذَا الجَانِبِ، فَإِنَّ عَائِشَةَ، حَدَّثَتْنِي: أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ هَذِهِ الحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ، إِلَّا مِنَ السَّامِ» قُلْتُ: وَمَا السَّامُ؟ قَالَ: المَوْتُ


Bukhari-Tamil-5687.
Bukhari-TamilMisc-5687.
Bukhari-Shamila-5687.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


சிலர் இந்தச் செய்தியை மட்டும் தனியாக அறிவித்துள்ளனர். வேறு சிலர் இதனுடன் பல்துலக்கும் குச்சி பற்றிய செய்தியை சேர்த்து அறிவித்துள்ளனர். (பார்க்க: அஹ்மத்-25133, நஸாயீ-5)


இந்தச் செய்தியின் கருத்து பற்றி சில அறிஞர்களின் விளக்கம்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
நூலுக்கு அல்கவாகிபுத் தராரீ என்ற நூலை விரிவுரையாக தந்துள்ள ஷம்ஸுத்தீன் அல்கிர்மானீ அவர்களின் விளக்கம்:

الكواكب الدراري في شرح صحيح البخاري (20/ 211):
ذكر الأطباء في منفعته أشياء كثيرة. منها ما قال جالينوس: أنها تحل النفخ وتقتل ديدان البطن وتنقي الزكام وتزيل العلة التي يتقشر منها الجلد وتقطع الثآليل والخيلان وتدر الطمث وتنفع الصداع وتقطع البثور الجرب وتحلل الأورام البلغمية وتنفع من نهشة الرتيلاء وإذا بخر به طرد الهوام. وقال غيره ويذهب حمى البلغم والسوداء وحمى الربع. الخطابي: هذا من العام الذي يراد به الخاص إذ ليس يجتمع في طبع شيء جميع القوى التي تقابل الطبائع كلها في معالجة الأدواء على اختلافها، وإنما أراد أنه شفاء من كل داء يحدث من الرطوبة والبلغم لأنه حار يابس فهو شفاء للداء المقابل له في الرطوبة والبرودة وذلك أن الدواء أبداً بالمضاد كما أن الغذاء بالمشاكل. أقول: ‌يحتمل ‌إرادة ‌العموم منه بأن يكون شفاء للكل لكن بشرط تركيبه مع الغير ولا محذور فيه بل يجب إرادة العموم لأن جواز الاستثناء معيار جواز العموم. وأما وقوع الاستثناء فهو معيار وقوع العموم فهو أمر ممكن، وقد أخبر الصادق عنه، واللفظ عام بدليل الاستثناء فيجب القول به.

மருத்துவ அறிஞர்கள் இதன் பயன்கள் குறித்துப் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் (ரோமானியப் பேரரசில் வாழ்ந்த மிகவும் புகழ்பெற்ற மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர்) ஜாலினூஸ் (Galen) என்பவர் கூறியுள்ளதாவது:

“இது வயிற்று உப்பசத்தைப் போக்கும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; ஜலதோஷத்தை நீக்கும்; தோல் உரிதல் நோயைக் குணப்படுத்தும்; மருக்கள் மற்றும் மச்சங்களை நீக்கும்; மாதவிடாயைச் சீராக்கும். மேலும், தலைவலிக்கு மருந்தாகவும், சொறி சிரங்குகளைக் குணப்படுத்தவும், கபத்தினால் ஏற்படும் வீக்கங்களைக் கரைக்கவும் இது பயன்படுகிறது. சிலந்தி போன்ற விஷப்பூச்சிக் கடிகளுக்கும் இது மருந்தாகும். இதன் புகைக்கு விஷப்பூச்சிகள் அண்டாது.”

மேலும் மற்ற அறிஞர்கள் கூறுகையில், இது கபம் மற்றும் கருப்பு பித்தத்தினால் (Black Bile) ஏற்படும் காய்ச்சல் மற்றும் நான்கு நாட்களுக்கு ஒருமுறை வரும் காய்ச்சலைப் போக்கும் என்கின்றனர்.

இந்தச் செய்தி பற்றி அல்கத்தாபீ பிறப்பு ஹிஜ்ரி 319
இறப்பு ஹிஜ்ரி 388
வயது: 69
அவர்களின் விளக்கம்:

“இந்தச் செய்தியில் இது அனைத்து நோய்களுக்கும் மருந்து என்று கூறப்பட்டிருந்தாலும் இருந்தாலும் இது மிகையாக கூறப்பட்டதாகும். இதன் கருத்தை சில குறிப்பிட்ட நோய்களுக்கே மருந்து என்று பொருள் கொள்ள வேண்டும். உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் எதிராகச் செயல்படும் ஆற்றல் ஒரே பொருளில் இருப்பது இயற்கைக்கு எதிரானது. எனவே, ஈரப்பதம் மற்றும் கபத்தினால் ஏற்படும் நோய்களுக்கு இது சிறந்த நிவாரணம் என்பதே இதன் கருத்தாகும். ஏனெனில் இது வெப்பம் மற்றும் வறண்ட தன்மையைக் கொண்டது. குளிர்ச்சி மற்றும் ஈரத்தன்மை கொண்ட நோய்களுக்கு அதற்கு எதிரான தன்மையுள்ள மருந்தே தீர்வாகும். உணவு என்பது உடலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும், மருந்து என்பது நோய்க்கு எதிரானதாக இருக்க வேண்டும்.

ஆனால் (கிர்மானீ ஆகிய) நான் கூறுகிறேன்:

“இந்தச் செய்தியின் வாசகம் அனைத்து நோய்களையும் உள்ளடக்கிய பொதுவான கருத்தையே குறிக்க வாய்ப்புள்ளது. அதாவது, கருஞ்சீரகத்தை மற்ற மருந்துப் பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், அது எல்லா நோய்களுக்கும் நிவாரணமாக அமையலாம். இதில் எவ்விதத் தடையும் இல்லை; எனவே “அனைத்து நோய்களுக்கும் மருந்து” என்று பொருள் கொள்வதே அவசியமாகும்.

ஏனெனில், ஒரு விஷயத்தைப் பற்றிப் பொதுவாகக் கூறிவிட்டு, அதிலிருந்து ஒன்றை மட்டும் விதிவிலக்காக (மரணத்தைத் தவிர என்று) பிரித்துக் காட்டினால், அந்த வாசகம் மற்ற அனைத்தையும் உள்ளடக்கியது என்பதுதான் மொழியியல் விதியாகும். எனவே, இது சாத்தியமான ஒரு விஷயம். மேலும், உண்மையாளரான நபி (ஸல்) அவர்கள் இது பற்றி கூறியுள்ளார்கள். அந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள ஆதாரத்தின் அடிப்படையில், இச்சொல் பொதுவான கருத்தையே தருகிறது. எனவே, இதனை நாம் ஏற்றுக் கொள்வது அவசியமல்லவா?

(நூல்: அல்கவாகிபுத் தராரீ-20/211)


ஆய்வின் சுருக்கம்:

1 . சிலர் கருஞ்சீரகம் பற்றிய செய்திகள் நடைமுறை உண்மைக்கு மாற்றமாக உள்ளது என்று கூறி மறுக்கின்றனர்.

2 . வேறு சிலர் முஸ்லிம்-4432 இல் வரும் கருத்தின் அடிப்படையிலும் கருஞ்சீரகம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். சில நோய்களுக்கு அது நேரடியாக மருந்தாக பயன்படும். சில நோய்களுக்கு அதனுடன் வேறு பொருட்களை சேர்க்கும்போது மருந்தாக பயன்படும். எனவே ஆய்வுக்குரிய விசயத்தை கருத்து சரியில்லை என்று மறுப்பது சரியான நிலைப்பாடு இல்லை என்று கூறுகின்றனர்.


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்னு அபூஅதீக் (ரஹ்) —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 23441, புகாரி-5687, இப்னு மாஜா-3449, …


  • காஸிம் பின் முஹம்மத் (ரஹ்) —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்- 936, அஹ்மத்- 25133, முஸ்னத் அபீ யஃலா- 4569,


  • அபூஅகீல் —> புஹைய்யா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: அஹ்மத்- 25067,


  • ஃகாலிப் பின் அப்ஜர் (ரலி) —> அபூபக்ர் (ரலி) —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-5688.


3 . புரைதா


4 . உஸாமா பின் ஷரீக்


5 . இப்னு உமர்


6 . ஸுஹைப்


விமர்சனங்கள்:

மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகம் மருந்தாகும் என இந்தச் செய்தி கூறுகின்றது. ஆனால் இது நடைமுறை உண்மைக்கு மாற்றமானது. அல்லாஹ்வை விட சொல்லில் மிக்க உண்மையாளன் யார்? என்று திருமறை குர்ஆனில் அல்லாஹ் கேட்கிறான்.

4:87 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ؕ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ‌ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِيْثًا

4:87. அல்லாஹ் – அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு கடவுள் இல்லை; நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் அவன் ஒன்று சேர்ப்பான் – இதில் சந்தேகமில்லை; மேலும், அல்லாஹ்வை விட சொல்லில் மிக்க உண்மையாளன் யார்?

4:122 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا‌ ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِيْلًا‏

4:122. மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவர்க்கபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே சதா ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அங்கு அவர்கள் என்றென்றும் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும், சொல்லால் அல்லாஹ்வைவிட உண்மையாளன் யார்?

கருஞ்சீரகம் பற்றிய மேற்கண்ட செய்தி உண்மைக்கு மாற்றமானது. ஹதீஸ்களும் அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி தான். அல்லாஹ் உண்மைக்கு மாற்றமாக கூறமாட்டான். இது சரியான செய்தி என்று யாரேனும் கூறினால், அவர்கள் இதை நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்தச் செய்தி சொர்க்கம், நரகம் போன்ற மறைவான விஷயங்களைப் பற்றிப் பேசவில்லை. அப்படி பேசினால் அதை நிரூபித்துக் காட்ட வேண்டுமென்று கேட்க மாட்டோம்.

மாறாக இந்தச் செய்தி தற்போது நமக்கிடையே உள்ள ஒரு பொருளுக்கு அதி பயங்கரமான ஆற்றல் இருப்பதாகக் கூறுகின்றது. உண்மையில் கருஞ்சீரகத்திற்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருக்கின்றதா? இல்லையா? என்பதை நாமே முடிவு செய்துவிட முடியும்.

இந்தச் செய்தியை நம்பக்கூடியவர்களே இது உண்மை என்று நிரூபித்துக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றார்கள். ஒரு பொருளுக்கு இல்லாத ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாக யாராவது கூறினால் அந்த ஆற்றலை நிரூபிக்குமாறு கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் நமக்கு வழிகாட்டுகிறான்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் ஒரு மன்னன் இறைவனுக்குரிய ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிட்டான்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க ஒரே ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கே உதிக்கச் செய்கிறான். மேற்கே மறையச் செய்கிறான்.

உனக்கு இறைத் தன்மை இருந்தால் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்குமாறு செய்! மேற்கே மறையும் சூரியனை கிழக்கில் மறையுமாறு செய்! என்று கேட்டார்கள். அந்த மன்னன் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப் போனான்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன் என்று இப்ராஹீம் கூறிய போது, நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்! என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 2:258

இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு மன்னன் சொல்வது அசத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். இதே அடிப்படையில் நாமும் கருஞ்சீரகம் தொடர்பான செய்தி தவறானது என்று வாதிடுகிறோம். இது சரியான செய்தி என்று யாரேனும் கூறினாலும் அவர்களின் உள்ளம் இதை மறுக்கவே செய்கிறது. இதை நடைமுறைப்படுத்திக் காட்ட மறுப்பதின் மூலம் இது பொய்யான செய்தி என்பதை நிரூபித்து வருகின்றனர்.


உலக காரிங்களை ஏற்பது நம் விருப்பம்.

ஒரு வாதத்திற்கு இது சரியானது என்று வைத்துக் கொண்டாலும், கருஞ்சீரக மருத்துவம் மறுமை நன்மை சம்பந்தப்பட்டது அல்ல. இது உலக விஷயம் தொடர்பான செய்தி. உலக விஷயங்களில், நாமே அதிகம் அதிகம் அறிந்தவர்கள் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள், எனவே, உண்மைக்கு மாற்றமான இந்த செய்தி ஏற்புடையது அல்ல.

صحيح مسلم

6277 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ كِلاَهُمَا عَنِ الأَسْوَدِ بْنِ عَامِرٍ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ – حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ وَعَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَرَّ بِقَوْمٍ يُلَقِّحُونَ فَقَالَ « لَوْ لَمْ تَفْعَلُوا لَصَلُحَ ». قَالَ فَخَرَجَ شِيصًا فَمَرَّ بِهِمْ فَقَالَ « مَا لِنَخْلِكُمْ ». قَالُوا قُلْتَ كَذَا وَكَذَا قَالَ « أَنْتُمْ أَعْلَمُ بِأَمْرِ دُنْيَاكُمْ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
4358


இந்த ஹதீஸை ஏற்கலாம் என்று கூறுவோர் கூறும் காரணங்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்: முஸ்லிம்-4432)

இந்த ஹதீஸை நாம் எப்படி புரிகிறோம்? இந்த ஹதீஸில் அனைத்து நோய்களுக்கும் மருந்துண்டு என்ற தகவல் உள்ளது. ஆனால் இதுவரை எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் இந்த ஹதீஸையும் ஏற்கக்கூடாது என்று கூறலாமா?. மேலும் நோய் குணமாகுவதும் அல்லாஹ்வின் அனுமதியின்படி தான் உள்ளது. இந்த மருந்து இன்ன நோய்க்கு மருந்து என்று கூறப்பட்டிருந்தாலும் எல்லாருக்கும் அதனால் குணமாவதில்லை. அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு மருந்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியிருக்கும்.

மேலும் கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸுக்கு பலரும் விளக்கம் கூறியுள்ளனர். கருஞ்சீரகம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். சில நோய்களுக்கு அது நேரடியாக மருந்தாக பயன்படலாம். சில நோய்களுக்கு அதனுடன் வேறு பொருட்களை சேர்க்கும்போது மருந்தாக பயன்படலாம். எனவே ஆய்வுக்குரிய விசயத்தை கருத்து சரியில்லை என்று மறுப்பது சரியான நிலைப்பாடு இல்லை.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.