Category: முஸ்லிம்

Muslim

Muslim-5160

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5160. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “(அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Book : 46


كَتَبَ اللهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ، قَالَ: وَعَرْشُهُ عَلَى الْمَاءِ

– حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا نَافِعٌ يَعْنِي ابْنَ يَزِيدَ، كِلَاهُمَا عَنْ أَبِي هَانِئٍ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، غَيْرَ أَنَّهُمَا لَمْ يَذْكُرَا: وَعَرْشُهُ عَلَى الْمَاءِ


Muslim-5161

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 3

உயர்ந்தோன் அல்லாஹ் மனிதர்களின் உள்ளங்களைத் தான் நாடிய வகையில் மாற்றுகிறான்.

5161. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்” என்று கூறிவிட்டு, “இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 46


«إِنَّ قُلُوبَ بَنِي آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ، كَقَلْبٍ وَاحِدٍ، يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ» ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ»


Muslim-5162

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 4

ஒவ்வொன்றும் விதியின்படியே (நடக்கிறது).

5162. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஒவ்வொன்றும் விதியின்படியே” என்று கூறிவந்த தோழர்களில் சிலரை நான் சந்தித்திருக்கிறேன். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “ஒவ்வொரு பொருளும் விதியின்படியே.”இயலாமை, புத்திசாலித்தனம் ஆகியவை உள்பட” அல்லது “புத்திசாலித்தனம், இயலாமை ஆகியவை உள்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள் என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 46


أَدْرَكْتُ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُونَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ، قَالَ: وَسَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ شَيْءٍ بِقَدَرٍ، حَتَّى الْعَجْزِ وَالْكَيْسِ، أَوِ الْكَيْسِ وَالْعَجْزِ»


Muslim-5163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5163. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) குறைஷி இணைவைப்பாளர்கள் விதி தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதிக்க வந்தனர். அப்போது, “அவர்கள் நரகத்தில் முகம்குப்புற இழுத்துவரப்படும் நாளில் “நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்). ஒவ்வொரு பொருளையும் நாம் திட்டமிட்டபடியே படைத்துள்ளோம்” (54:48,49) எனும் இறைவசனங்கள் அருளப்பெற்றன.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 46


جَاءَ مُشْرِكُو قُرَيْشٍ يُخَاصِمُونَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَدَرِ، فَنَزَلَتْ {يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ، إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ} [القمر: 49]


Muslim-5164

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 5

விபசாரம் முதலானவற்றில் மனிதனுக்குள்ள பங்கு விதியில் எழுதப்பட்டுவிட்டது.

5164. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரத்தில் ஆதமின் மக(ன் மனித)னுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். (மனிதனின் கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண்ணின் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவின் விபசாரம் (ஆபாசமான) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸை விடச் சிறு பாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

«إِنَّ اللهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا، أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ، فَزِنَا الْعَيْنَيْنِ النَّظَرُ، وَزِنَا اللِّسَانِ النُّطْقُ، وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي، وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ أَوْ يُكَذِّبُهُ»، قَالَ عَبْدٌ فِي رِوَايَتِهِ: ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ