Category: முஸ்லிம்

Muslim-5060

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5060. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் அடிமைப் பெண் ஒட்டகமொன்றின் மீதிருந்த(படி பயணம் செய்துகொண்டிருந்)தார். அதன் மீது மக்களின் பயணச் சாதனங்கள் சில இருந்தன. (முன்னே) சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களையும் குறுகலான மலை வருவதையும் கண்ட அப்பெண், “ஹல்!” என அந்த ஒட்டகத்தை அதட்டிவிட்டு, “இறைவா! இ(ந்த ஒட்டகத்)தை நீ சபிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “சாபத்தைச் சுமந்துவரும் இந்த ஒட்டகம் நம்முடன் வர வேண்டாம்” என்று கூறினார்கள்.

Book : 45


بَيْنَمَا جَارِيَةٌ عَلَى نَاقَةٍ، عَلَيْهَا بَعْضُ مَتَاعِ الْقَوْمِ، إِذْ بَصُرَتْ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَضَايَقَ بِهِمِ الْجَبَلُ، فَقَالَتْ: حَلْ، اللهُمَّ الْعَنْهَا، قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُصَاحِبْنَا نَاقَةٌ عَلَيْهَا لَعْنَةٌ»


Muslim-5059

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5059. மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அந்தச் சாம்பல் நிற ஒட்டகத்தை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது” என்று இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அதன் மீதுள்ளவற்றை அகற்றிவிட்டு அதை வெறுமேனியாக விட்டுவிடுங்கள். ஏனெனில், அது சாபத்துக்குரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Book : 45


فَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهَا، نَاقَةً وَرْقَاءَ، وَفِي حَدِيثِ الثَّقَفِيِّ: فَقَالَ: «خُذُوا مَا عَلَيْهَا وَأَعْرُوهَا، فَإِنَّهَا مَلْعُونَةٌ»


Muslim-5058

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24

கால்நடைகள் முதலியவற்றைச் சபிப்பது தடை செய்யப்பட்டதாகும்.

5058. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்தபோது, அன்சாரிகளில் ஒரு பெண் ஒட்டகமொன்றின்மீது அமர்ந்திருந்தார். அந்த ஒட்டகம் முரண்டு பிடித்தபோது அப்பெண் அ(ந்த ஒட்டகத்)தைச் சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதன் மீதுள்ளவற்றை அகற்றிவிட்டு, அதை விட்டு விடுங்கள். ஏனெனில், அது சாபத்திற்குள்ளானதாகும்” என்று கூறினார்கள்.

அதையடுத்து அந்த ஒட்டகம் மக்களிடையே நடந்து செல்வதையும், அதை எவரும் சீண்டாமலிருந்ததையும் இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 45


بَيْنَمَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَامْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ عَلَى نَاقَةٍ، فَضَجِرَتْ فَلَعَنَتْهَا، فَسَمِعَ ذَلِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «خُذُوا مَا عَلَيْهَا وَدَعُوهَا، فَإِنَّهَا مَلْعُونَةٌ» قَالَ عِمْرَانُ: فَكَأَنِّي أَرَاهَا الْآنَ تَمْشِي فِي النَّاسِ، مَا يَعْرِضُ لَهَا أَحَدٌ


Muslim-5057

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5057. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “ஆயிஷா (ரலி) அவர்கள் (பயணத்துக்குப் பழக்கப்படாத) முரட்டு சுபாவமுடைய ஒட்டகம் ஒன்றில் ஏறிச்சென்றார்கள். அப்போது அதை விரட்டலானார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஆயிஷா!) நளினத்தைக் கையாள்வாயாக” என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Book : 45


رَكِبَتْ عَائِشَةُ بَعِيرًا، فَكَانَتْ فِيهِ صُعُوبَةٌ، فَجَعَلَتْ تُرَدِّدُهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَلَيْكِ بِالرِّفْقِ» ثُمَّ ذَكَرَ بِمِثْلِهِ


Muslim-5056

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5056. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 45


«إِنَّ الرِّفْقَ لَا يَكُونُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ، وَلَا يُنْزَعُ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ»


Muslim-5055

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5055. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்” என்று கூறினார்கள்.

Book : 45


«يَا عَائِشَةُ» إِنَّ اللهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ، وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لَا يُعْطِي عَلَى الْعُنْفِ، وَمَا لَا يُعْطِي عَلَى مَا سِوَاهُ


Muslim-5054

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5054. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.

இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 45


«مَنْ حُرِمَ الرِّفْقَ، حُرِمَ الْخَيْرَ أَوْ مَنْ يُحْرَمِ الرِّفْقَ، يُحْرَمِ الْخَيْرَ»


Muslim-5053

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5053. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நளினத்தை இழந்தவர் நன்மையை இழந்தவர் ஆவார்.

இதை ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 45


«مَنْ يُحْرَمِ الرِّفْقَ، يُحْرَمِ الْخَيْرَ»


Muslim-5052

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23

நளினத்தின் சிறப்பு.

5052. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.

இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 45


«مَنْ يُحْرَمِ الرِّفْقَ، يُحْرَمِ الْخَيْرَ»


Muslim-5051

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22

அருவருப்பாகப் பேசும் ஒருவரிடமிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்வதற்காக அவரிடம் ஒருவர் கனிவாகப் பேசுவது.

5051. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை உள்ளே வரச்சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்” என்று அவரைப் பற்றிச் சொன்னார்கள். (வீட்டுக்கு உள்ளே) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவதைப் போன்றே) அவரிட(மு)ம் நபி (ஸல்) அவர்கள் கனிவாகப் பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவரைக் குறித்து ஒரு விதமாகச் சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?” என்று கேட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவர் யாரெனில், மக்கள் எவரது அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தம்மைத்) தற்காத்துக் கொள்ள ஒதுங்கிக்கொள்கிறார்களோ அவர்தான். (அருவருப்பான பேச்சுகள் பேசும்

أَنَّ رَجُلًا اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ائْذَنُوا لَهُ، فَلَبِئْسَ ابْنُ الْعَشِيرَةِ، أَوْ بِئْسَ رَجُلُ الْعَشِيرَةِ» فَلَمَّا دَخَلَ عَلَيْهِ أَلَانَ لَهُ الْقَوْلَ، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ قُلْتَ لَهُ الَّذِي قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ الْقَوْلَ؟ قَالَ: «يَا عَائِشَةُ إِنَّ شَرَّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ، مَنْ وَدَعَهُ، أَوْ تَرَكَهُ النَّاسُ اتِّقَاءَ فُحْشِهِ»

– حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، كِلَاهُمَا عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، فِي هَذَا الْإِسْنَادِ مِثْلَ مَعْنَاهُ، غَيْرَ أَنَّهُ قَالَ: «بِئْسَ أَخُو الْقَوْمِ وَابْنُ الْعَشِيرَةِ»


Next Page » « Previous Page