Category: முஸ்லிம்

Muslim-4820

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4820. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தன்மான உணர்ச்சியால்) கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் வைராக்கியம் கொண்டதைப் போன்று (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில்) எந்தத் துணைவியரின் மீதும் நான் வைராக்கியம் கொண்டதில்லை. ஏனெனில், கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) நினைவுகூர்வதை நான் கேட்டுவந்தேன்.

-என்னை நபி (ஸல்) அவர்கள் மணம் புரிந்து கொள்வதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே கதீஜா இறந்துவிட்டிருந்தார்.-

மேலும், முத்து மாளிகை ஒன்று சொர்க்கத்தில் கதீஜாவுக்கு கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் கட்டளையிட்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து (அதன் இறைச்சியில் சிறிதளவை) கதீஜா (ரலி) அவர்களின் தோழியருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப்புவார்கள்.

Book : 44


«مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَلَقَدْ هَلَكَتْ قَبْلَ أَنْ يَتَزَوَّجَنِي بِثَلَاثِ سِنِينَ، لِمَا كُنْتُ أَسْمَعُهُ يَذْكُرُهَا وَلَقَدْ أَمَرَهُ رَبُّهُ عَزَّ وَجَلَّ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ مِنْ قَصَبٍ فِي الْجَنَّةِ، وَإِنْ كَانَ لَيَذْبَحُ الشَّاةَ، ثُمَّ يُهْدِيهَا إِلَى خَلَائِلِهَا»


Muslim-4819

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4819. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கதீஜா பின் குவைலித் (ரலி) அவர்களுக்குச் சொர்க்கத்தில் மாளிகை ஒன்று கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னார்கள்.

Book : 44


«بَشَّرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَدِيجَةَ بِنْتَ خُوَيْلِدٍ بِبَيْتٍ فِي الْجَنَّةِ»


Muslim-4818

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4818. இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களிடம், அவருக்குச் சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று கிடைக்கவிருப்பதாக நற்செய்தி கூறிவந்தார்களா?”என்று கேட்டேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள், “ஆம்; சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ இல்லாத முத்து மாளிகை ஒன்று அவர்களுக்குக் கிடைக்க விருப்பதாக நற்செய்தி சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 44


قُلْتُ لِعَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى، أَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَّرَ خَدِيجَةَ بِبَيْتٍ فِي الْجَنَّةِ؟ قَالَ: نَعَمْ، «بَشَّرَهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ لَا صَخَبَ، فِيهِ وَلَا نَصَبَ»

– حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، وَجَرِيرٌ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ كُلُّهُمْ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ


Muslim-4817

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4817. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ! கதீஜா தம்முடன் குழம்பு, அல்லது உணவு, அல்லது குடி பானம் உள்ள பாத்திரத்தை எடுத்துக்கொண்டு உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் முகமன் (சலாம்) கூறி, அவருக்குச் சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “என் தரப்பிலிருந்தும்” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.

Book : 44


أَتَى جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْكَ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ، فَإِذَا هِيَ أَتَتْكَ، فَاقْرَأْ عَلَيْهَا السَّلَامَ مِنْ رَبِّهَا عَزَّ وَجَلَّ، وَمِنِّي، وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ، لَا صَخَبَ فِيهِ وَلَا نَصَبَ ” قَالَ أَبُو بَكْرٍ فِي رِوَايَتِهِ: عَنْ أَبِي هُرَيْرَةَ وَلَمْ يَقُلْ: سَمِعْتُ وَلَمْ يَقُلْ فِي الْحَدِيثِ: وَمِنِّي


Muslim-4816

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4816. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்களில் பலபேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் புதல்வி மர்யமையும்,ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. மற்றப் பெண்களை விட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பானது, எல்லா வகை உணவுகளையும்விட “ஸரீத்” (தக்கடி) எனும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 44


«كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ غَيْرُ مَرْيَمَ بِنْتِ عِمْرَانَ، وَآسِيَةَ امْرَأَةِ فِرْعَوْنَ، وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ»


Muslim-4815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

4815. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா பின்த் குவைலித் ஆவார்.

இதை அலீ (ரலி) அவர்கள் கூஃபா நகரில் குறிப்பிட்டதாக அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூகுரைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இதைக் கூறியபோது அறிவிப்பாளர் வகீஉ (ரஹ்) அவர்கள் வானத்தையும் பூமியையும் நோக்கி (இம்மையிலும் மறுமையிலும் சிறந்தவர்) என்று சைகை செய்தார்கள்.

Book : 44


«خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ»

قَالَ: أَبُو كُرَيْبٍ، وَأَشَارَ وَكِيعٌ إِلَى السَّمَاءِ وَالْأَرْضِ


Muslim-4814

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4814. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் ஏற்றிக்கொண்டு ஒரு விஷயத்தை இரகசியமாக என்னிடம் சொன்னார்கள். அதை நான் மக்களில் யாரிடமும் சொல்லமாட்டேன்.

Book : 44


«أَرْدَفَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ذَاتَ يَوْمٍ خَلْفَهُ، فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنَ النَّاسِ»


Muslim-4813

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4813. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி (ஊருக்குள்) வரும்போது, (அவர்களுடைய குடும்பத்துச் சிறுவர்களான) நாங்கள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்போம். இவ்வாறு ஒரு முறை நானும் ஹசன் அல்லது ஹுசைன் ஆகியோரில் ஒருவரும் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றபோது, எங்களில் ஒருவரைத் தமக்கு முன்பக்கத்திலும் மற்றொருவரைப் பின்பக்கத்திலும் தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள். நாங்கள் (மூவரும் ஒரே வாகனத்தில் அமர்ந்தபடி) மதீனாவிற்குள் நுழைந்தோம்.

Book : 44


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ تُلُقِّيَ بِنَا قَالَ فَتُلُقِّيَ بِي وَبِالْحَسَنِ أَوْ بِالْحُسَيْنِ» قَالَ: «فَحَمَلَ أَحَدَنَا بَيْنَ يَدَيْهِ وَالْآخَرَ خَلْفَهُ حَتَّى دَخَلْنَا الْمَدِينَةَ»


Muslim-4812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4812. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தை முடித்துக்கொண்டு (ஊருக்குள்) வரும்போது, அவர்களுடைய குடும்பத்துச் சிறுவர்களால் அவர்கள் எதிர்கொண்டு வரவேற்கப் படுவார்கள். இவ்வாறு ஒருமுறை அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தபோது நான் முந்திக்கொண்டு அவர்களிடம் சென்றேன். உடனே அவர்கள் என்னை (தமது வாகனத்தில்) முன்பக்கத்தில் ஏற்றிக்கொண்டார்கள். பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்களின் இரு புதல்வர்களில் ஒருவர் அங்கு கொண்டுவரப்பட்டார். அவரைத் தமக்குப் பின்பக்கத்தில் ஏற்றிக்கொண்டார்கள். நாங்கள் மூவரும் ஒரே வாகனத்தில் அமர்ந்தவாறு மதீனாவிற்குள் நுழைந்தோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 44


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ تُلُقِّيَ بِصِبْيَانِ أَهْلِ بَيْتِهِ، قَالَ: وَإِنَّهُ قَدِمَ مِنْ سَفَرٍ فَسُبِقَ بِي إِلَيْهِ، فَحَمَلَنِي بَيْنَ يَدَيْهِ، ثُمَّ جِيءَ بِأَحَدِ ابْنَيْ فَاطِمَةَ، فَأَرْدَفَهُ خَلْفَهُ، قَالَ: فَأُدْخِلْنَا الْمَدِينَةَ، ثَلَاثَةً عَلَى دَابَّةٍ


Muslim-4811

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

4811. அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள், “நானும் நீங்களும் இப்னு அப்பாஸும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவர்கள் ஒரு பயணத்தை முடித்துத் திரும்பியபோது) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், “ஆம்” என்றார்கள். அப்போது (அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸையும்) வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள்; உங்களை விட்டுவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீ முளைக்கா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

قَالَ عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، لِابْنِ الزُّبَيْرِ: أَتَذْكُرُ إِذْ تَلَقَّيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَأَنْتَ وَابْنُ عَبَّاسٍ؟ قَالَ: نَعَمْ «فَحَمَلَنَا، وَتَرَكَكَ»

– حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ وَإِسْنَادِهِ