Author: Farook

Bukhari-5704

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 (மருத்துவ சிகிச்சைக்காக) சூடிட்டுக்கொள்வது அல்லது பிறருக்குச் சூடிடுவது. மேலும், சூடிட்டுக்கொள்ளமல் இருப்பதன் சிறப்பு.26

5704. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மை ஏதும் இருக்குமானால் குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக் கொள்வதில் தான் அது இருக்கும். ஆயினும், நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை.

என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

Book : 76


«إِنْ كَانَ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ شِفَاءٌ، فَفِي شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ لَذْعَةٍ بِنَارٍ، وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ»


Bukhari-5703

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 (நோய்த்) தொல்லையின் காரணத்தால் தலைமுடியை மழித்துக்கொள்வது.

5703. கஅப் இப்னு உஜ்ரா(ரலி) கூறினார்

ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அடுப்பின் கீழே தீ மூட்டிக் கொண்டிருந்தேன். பேன்கள் என் தலையிலிருந்து உதிர்ந்துகொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘உங்கள் (தலையிலுள்ள) பேன்கள் உங்களைத் தொந்தரவு செய்கின்றனவா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் தலைமழித்துக் கொண்டு (இஹ்ராமின் விதியை மீறியதற்குப் பரிகாரமாக) மூன்று நாள்கள் நோன்பு நோறுங்கள்; அல்லது ஆறு பேருக்கு உணவளியுங்கள்; அல்லது ஒரு தியாகப் பிராணியை அறுத்து (குர்பானி) கொடுங்கள்’ என்றார்கள்.25

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப்(ரஹ்) கூறினார்: ‘இவற்றில் எதை முதலில் குறிப்பிட்டார்கள்’ என்று எனக்குத் தெரியவில்லை.

Book : 76


أَتَى عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الحُدَيْبِيَةِ، وَأَنَا أُوقِدُ تَحْتَ بُرْمَةٍ، وَالقَمْلُ يَتَنَاثَرُ عَنْ رَأْسِي، فَقَالَ: «أَيُؤْذِيكَ هَوَامُّكَ؟» قُلْتُ: نَعَمْ ، قَالَ: «فَاحْلِقْ، وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةً، أَوْ انْسُكْ نَسِيكَةً» قَالَ أَيُّوبُ: لاَ أَدْرِي بِأَيَّتِهِنَّ بَدَأَ


Bukhari-5702

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5702. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மையேதும் இருக்குமானால் தேன் அருந்துவது, அல்லது குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக் கொள்வதில் தான் அது இருக்கும். (ஆயினும்,) நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை.

என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.24

Book :76


«إِنْ كَانَ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ خَيْرٌ، فَفِي شَرْبَةِ عَسَلٍ، أَوْ شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ لَذْعَةٍ مِنْ نَارٍ، وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ»


Bukhari-5700

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 ஒற்றைத் தலைவலி மற்றும் பொதுவான தலைவலிக்காகக் குருதி உறிஞ்சி எடுப்பது.23

5700. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் தமக்கேற்பட்ட (ஒற்றைத் தலை) வலியின் காரணத்தால் ஒரு நீர் நிலையின் அருகில் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். இந்த நீர்நிலை ‘லஹ்யு ஜமல்’ என்றழைக்கப்பட்டு வந்தது.

Book : 76


«احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَأْسِهِ وَهُوَ مُحْرِمٌ، مِنْ وَجَعٍ كَانَ بِهِ، بِمَاءٍ يُقَالُ لَهُ لُحْيُ جَمَلٍ»


Bukhari-5699

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5699. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.

Book :76


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «احْتَجَمَ فِي رَأْسِهِ»


Bukhari-5698

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 தலையில் குருதி உறிஞ்சி எடுப்பது21

5698. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையிலுள்ள ‘லஹ்யீ ஜமல்’ எனும் இடத்தில் வைத்துத் தம் தலையின் நடுவே குருதி உறிஞ்சி எடுத்தார்கள். அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.22

Book : 76


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «احْتَجَمَ بِلَحْيِ جَمَلٍ مِنْ طَرِيقِ مَكَّةَ، وَهُوَ مُحْرِمٌ، فِي وَسَطِ رَأْسِهِ»


Bukhari-5697

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5697. ஆஸிம் இப்னு உமர் இப்னி கத்தாதா(ரஹ்) கூறினார்

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) முகன்னஉ இப்னு சினான்(ரஹ்) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு, ‘நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ளாதவரை நான் (திரும்பிச்) செல்லமாட்டேன். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அதில் நிவாரணம் உள்ளது’ என்று சொல்வதை கேட்டுள்ளேன்’ என்று கூறினார்கள்.

Book :76


أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: عَادَ المُقَنَّعَ ثُمَّ قَالَ: لاَ أَبْرَحُ حَتَّى تَحْتَجِمَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ فِيهِ شِفَاءً»


Bukhari-5696

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 நோயின் காரணத்தால் குருதி உறிஞ்சி எடுப்பது.

5696. அபூ உபைதா ஹுமைத் அத்தவீல்(ரஹ்) கூறினார்

அனஸ்(ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி வாங்குபவருக்குக் கூலி கொடுப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அபூ தய்பா என்பவர் குருதி உறிஞ்சி வாங்கினார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு(க் கூலியாக) இரண்டு ‘ஸாஉ’ உணவு கொடுத்தார்கள். மேலும், அபூ தய்பாவின் எசமானர்களுடன் நபி(ஸல்) அவர்கள் பேசியதையடுத்து (அவர்களுக்கு அவர் செலுத்த வேண்டிய வரியை) அவர்கள் குறைத்தார்கள்.

மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும், வெண்கோஷ்டமும்தான்.19 மேலும், உங்கள் குழந்தைகளை (அவர்களின்) அடிநாக்கு அழற்சியைப் போக்க (தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் அவசியம் கோஷ்டத்தைப் பயன்படுத்துங்கள்’ என்று கூறினார்கள்.20

Book : 76


أَنَّهُ سُئِلَ عَنْ أَجْرِ الحَجَّامِ، فَقَالَ: احْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَجَمَهُ أَبُو طَيْبَةَ، وَأَعْطَاهُ صَاعَيْنِ مِنْ طَعَامٍ، وَكَلَّمَ مَوَالِيَهُ فَخَفَّفُوا عَنْهُ، وَقَالَ: «إِنَّ أَمْثَلَ مَا تَدَاوَيْتُمْ بِهِ الحِجَامَةُ، وَالقُسْطُ البَحْرِيُّ» وَقَالَ: «لاَ تُعَذِّبُوا صِبْيَانَكُمْ بِالْغَمْزِ مِنَ العُذْرَةِ، وَعَلَيْكُمْ بِالقُسْطِ»


Bukhari-5695

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 பயணத்திலும் இஹ்ராமுடைய நிலையிலும் குருதி உறிஞ்சி எடுப்பது. இதை(ப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடமி ருந்து அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.17

5695. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.18

Book : 76


«احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ»


Next Page » « Previous Page