Author: Farook

Bukhari-5418

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 அஸ்ஸரீத்’ (தக்கடி எனும் உணவு).38

5418. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஆண்களில் பல பேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் புதல்வி மர்யமையும், ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் தவிர வேறெவரும் முழுமைபெறவில்லை. மற்ற பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு எல்லா வகை உணவுகளையும் விட ‘ஸரீது’க்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.

என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.39

Book : 70


«كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلَّا مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَفَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ»


Bukhari-5417

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 24

தல்பீனா (பால் பாயசம்)

5417. உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மனைவியார் ஆயிஷா (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர, மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள்.

அப்போது ஒரு பாத்திரத்தில் ‘தல்பீனா’ (எனும் பால் பாயசம்) தயாரிக்கும்படி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும்.

பிறகு ‘ஸரீத்’ (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் ‘தல்பீனா’ ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், ‘தல்பீனா’ (எனும் பாயசம்) நோயாளியின் மனதிற்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்று சொல்வார்கள்.


அத்தியாயம்: 70


أَنَّهَا كَانَتْ إِذَا مَاتَ المَيِّتُ مِنْ أَهْلِهَا، فَاجْتَمَعَ لِذَلِكَ النِّسَاءُ، ثُمَّ تَفَرَّقْنَ إِلَّا أَهْلَهَا وَخَاصَّتَهَا، أَمَرَتْ بِبُرْمَةٍ مِنْ تَلْبِينَةٍ فَطُبِخَتْ، ثُمَّ صُنِعَ ثَرِيدٌ فَصُبَّتِ التَّلْبِينَةُ عَلَيْهَا، ثُمَّ قَالَتْ: كُلْنَ مِنْهَا، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «التَّلْبِينَةُ مُجِمَّةٌ لِفُؤَادِ المَرِيضِ، تَذْهَبُ بِبَعْضِ الحُزْنِ»


Bukhari-5416

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5416. ஆயிஷா(ரலி) கூறினார்

முஹம்மத்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.

Book :70


«مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ قَدِمَ المَدِينَةَ، مِنْ طَعَامِ البُرِّ ثَلاَثَ لَيَالٍ تِبَاعًا، حَتَّى قُبِضَ»


Bukhari-5415

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5415. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை; பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை; அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் இப்னு அபி ல்ஃபுராத் அல்குறஷீ(ரஹ்) கூறினார்.

இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்களிடம், ‘எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(தோலாலான) உணவு விரிப்புகளின் மீது’ என்று பதிலளித்தார்கள்.36

Book :70


«مَا أَكَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خِوَانٍ، وَلاَ فِي سُكْرُجَةٍ، وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ» قُلْتُ لِقَتَادَةَ: عَلاَمَ يَأْكُلُونَ؟ قَالَ: «عَلَى السُّفَرِ»


Bukhari-5414

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5414. ஸயீத் இப்னு அபீ ஸயீத் அல்மக்புரீ(ரஹ்) கூறினார்

(நபித்தோழர்) அபூ ஹுரைரா(ரலி) (ஒரு நாள்), தம் முன்னே பொரிக்கப்பட்ட ஓர் ஆட்டை(ச் சாப்பிடுவதற்காக) வைத்திருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அபூ ஹுரைரா(ரலி) அவர்களை(த் தம்முடன் அதைச் சாப்பிட வருமாறு) அழைத்தார்கள். ஆனால், அன்னார் அவர்களுடன் சாப்பிட மறுத்து ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வாற்கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்பாத நிலையிலேயே இந்த உலகிலிருந்து சென்றார்கள்’ என்று கூறினார்கள்.

Book :70


أَنَّهُ مَرَّ بِقَوْمٍ بَيْنَ أَيْدِيهِمْ شَاةٌ مَصْلِيَّةٌ، فَدَعَوْهُ، فَأَبَى أَنْ يَأْكُلَ، وَقَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الدُّنْيَا وَلَمْ يَشْبَعْ مِنْ خُبْزِ الشَّعِيرِ»


Bukhari-5413

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5413. அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்

நான் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நன்கு சலித்து சுத்தம் செய்யப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட) வெள்ளை ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு ஸஹ்ல்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து தமக்கு அவன் இறப்பை அளிக்கும் வரை (சலித்து சுத்தமாக்கப்பட்ட மாவினாலான) வெள்ளை ரொட்டியைப் பார்த்ததேயில்லை’ என்று பதிலளித்தார்கள். நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்ததுண்டா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து தம்மை அவன் இறக்கச் செய்யும் வரை சல்லடையைக் கண்டதேயில்லை’ என்றார்கள். நான், ‘கோதுமையை நீங்கள் எப்படிச் சாப்பிட்டுவந்தீர்கள்? சலிக்காமலேயா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நாங்கள் கோதுமையை அரைத்து, (உமியை நீக்க) அதில் (வாயால்) ஊதுவோம். அதிலிருந்து (தவிடு, உமி போன்ற) பறப்பன பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீர் கலந்து (ரொட்டி தயாரித்து) உண்போம்’ என்றார்கள்.35

سَأَلْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، فَقُلْتُ: هَلْ أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ؟ فَقَالَ سَهْلٌ: «مَا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ، مِنْ حِينَ ابْتَعَثَهُ اللَّهُ حَتَّى قَبَضَهُ اللَّهُ» قَالَ: فَقُلْتُ: هَلْ  كَانَتْ لَكُمْ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنَاخِلُ؟ قَالَ: «مَا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْخُلًا، مِنْ حِينَ ابْتَعَثَهُ اللَّهُ حَتَّى قَبَضَهُ اللَّهُ» قَالَ: قُلْتُ: كَيْفَ كُنْتُمْ تَأْكُلُونَ الشَّعِيرَ غَيْرَ مَنْخُولٍ؟ قَالَ: كُنَّا نَطْحَنُهُ وَنَنْفُخُهُ، فَيَطِيرُ مَا طَارَ، وَمَا بَقِيَ ثَرَّيْنَاهُ فَأَكَلْنَاهُ


Bukhari-5412

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5412. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களுடன் (ஆரம்பமாக இஸ்லாத்தை ஏற்று) இருந்த ஏழு பேரில் ஏழாவது நபராக நான் இருந்தேன். (உண்பதற்கு) ‘ஹுப்லா’ அல்லது ‘ஹபலா’ எனும் (முள்) மரத்தின் இலையைத் தவிர வேறெதுவும் எங்களிடம் இருக்கவில்லை. எந்த அளவுக்கென்றால் (அந்த இலைகளை உண்டு) நாங்கள் ஆடு கழிக்கிற (கெட்டிச் சாணத்)தைப் போன்றே மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபாவாசிகளான) ‘பனூஅசத்’ குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூறி, என்னுடைய) இஸ்லாம் தொடர்பாக என்னைக் குறை கூறலானார்கள். அப்படியானால், (இதுவரை நான் செய்துவந்த வழிபாட்டு) முயற்சியெல்லாம் வீணாம், நான் இழப்புக்குள்ளாம் விட்டேன் (போலும் என வருந்தினேன்.)34

Book :70


«رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا لَنَا طَعَامٌ إِلَّا وَرَقُ الحُبْلَةِ، أَوِ الحَبَلَةِ، حَتَّى يَضَعَ أَحَدُنَا مَا تَضَعُ الشَّاةُ، ثُمَّ أَصْبَحَتْ بَنُو أَسَدٍ تُعَزِّرُنِي عَلَى الإِسْلاَمِ، خَسِرْتُ إِذًا وَضَلَّ سَعْيِي»


Bukhari-5411

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் சாப்பிட்டுவந்தவை.

5411. அபூஹுரைரா (ரலி) கூறினார்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தம் தோழர்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒவ்வொரு மனிதருக்கும் ஏழு பேரீச்சம் பழங்களை வழங்கினார்கள். எனக்கும் ஏழு பேரீச்சம் பழங்கள் கொடுத்தார்கள். அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத காய்ந்த) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழமாக இருந்தது. அந்தப் பழங்களிலேயே அதுதான் எனக்கு வியப்பளித்தது. மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.

Book : 70


«قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَيْنَ أَصْحَابِهِ تَمْرًا، فَأَعْطَى كُلَّ إِنْسَانٍ سَبْعَ تَمَرَاتٍ، فَأَعْطَانِي سَبْعَ تَمَرَاتٍ إِحْدَاهُنَّ حَشَفَةٌ، فَلَمْ يَكُنْ فِيهِنَّ تَمْرَةٌ أَعْجَبَ إِلَيَّ مِنْهَا، شَدَّتْ فِي مَضَاغِي»


Bukhari-5410

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 வாற்கோதுமையில் (உமியை நீக்க) ஊதுவது.33

5410. அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்

ஸலமா இப்னு தீனார்(ரஹ்) ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (சலித்து) சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை மாவை நீங்கள் பார்த்ததுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நான், ‘அப்படியானால் நீங்கள் வாற்கோதுமையைச் (சல்லடையில்) சலிப்பீர்கள் தானே?’ என்று கேட்க, அவர்கள் ‘இல்லை; ஆனால், நாங்கள் அதை (வாயால்) ஊதி (சுத்தப்படுத்தி) வந்தோம்’ என்று கூறினார்கள்.

Book : 70


أَنَّهُ سَأَلَ سَهْلًا: هَلْ رَأَيْتُمْ فِي زَمَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ؟ قَالَ: «لاَ» فَقُلْتُ: فَهَلْ كُنْتُمْ تَنْخُلُونَ الشَّعِيرَ؟ قَالَ: «لاَ، وَلَكِنْ كُنَّا نَنْفُخُهُ»


Bukhari-5409

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 21

நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதில்லை.

5409. நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 70


«مَا عَابَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ، إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ، وَإِنْ كَرِهَهُ تَرَكَهُ»


Next Page » « Previous Page